வாழ்தலினிது

இனிது 1

வொயிட் ஃபீல்டு, பெங்களூரு, கர்நாடகா

புத்தக அலமாரியில் நிதானமாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்த பவதாரிணியின் மனம் அங்கே இல்லாமல் சிந்தனையின் வயப்பட்டிருந்தது.

அவள் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது முற்றிலும் வேறொன்று. எங்கே அவள் கணக்கு தவறிப்போனது என்று புரியாமல் தவித்தாள்.

கீழே இருந்த அட்டைப்பெட்டியில் இருந்து மேலும் புத்தகங்களை எடுக்க அவள் குனிய, அவள் அணிந்திருந்த சிவப்பு வண்ண டீஷர்ட்டின் உள்ளிருந்து புதிதாக பொன் மஞ்சள் திருமாங்கல்யம் அவள் கண் முன்னே ஊசலாடியது.

மெல்ல நிமிர்ந்தவள் பார்வை அதிலிருந்து விலகவில்லை. அவள் எதிர்பார்த்த திருமணம். ஆனால் எதிர்பாராத விதத்தில் நிகழ்ந்த முடிந்த மாயம் எப்படி என்று புரியாமல் விழித்தாள்.

அவள் சிந்தனையை கலைக்கவென்றே அவளது கைபேசி பாட்டிசைத்து அழைத்தது.

“ஏய் தாரணி என்ன டி பண்ணிட்டு இருக்க? உங்களை லஞ்சுக்கு வர சொன்னேன்ல? அவனுக்கு போன் பண்ணினா எடுக்கவே மாட்டேன்கிறான். சமையல் எல்லாம் முடிச்சுட்டேன். எப்ப டி வருவீங்க?” கேள்விகளை அடுக்கினாள் அவளது தோழி ரேவதி.

“ரேவா அவன்… நான் அவன் கிட்ட நீ கூப்பிட்டதை சொல்லவே மறந்துட்டேன் டி. அவன் காலைல வெளில போனவன் தான் இன்னும் வரல டி.” என்று தயங்கித் தயங்கிக் கூறினாள்.

“என்ன டி பேசுற? என் வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்டா இப்படி தான் செய்வியா? நான் நேத்தே அவன் கிட்ட பேசுறேன்னு சொன்னேன், நீ தான் பெரிய இவளாட்டம் நானே சொல்றேன்னு சொன்ன? இங்க நீ வருவன்னு சொல்லிட்டேன். என் ஹஸ்பண்ட், மாமனார் எல்லாம் உங்களை எதிர்பார்க்கிறாங்க டி லூசு.” என்று திட்டித் தீர்த்தாள்.

“ரேவா. எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசினா என்ன டி அர்த்தம்? அவன் கிட்ட பேசவே எனக்கு எப்படியோ இருக்கு டி. இதுல உங்க வீட்டுக்கு நீ விருந்துக்கு கூப்பிட்டதை எப்படி சொல்லி, அவனோட கிளம்பி வருவேன்?” என்று தவிப்பாக என்னை புரிந்து கொள்ளேன் என்ற மன்றாடலுடன் வந்தது அவள் வார்த்தைகள்.

ஆனால் ரேவதி அப்படி அதனை எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கோபத்தில் கனன்றாள்.

“அடிச்சேன்னு வை நேரா அசாம்ல போய் விழுவ நாயே! அவன் கிட்ட பேச உனக்கென்ன தயக்கம்? அவன் என்ன யாரோவா? என்ன டி பேசிட்டு இருக்க? நீ போனை வை நான் உன் வீட்ல பேசிக்கிறேன்.” என்று அழைப்பை துண்டித்தாள்.

“ஐயோ வேண்டாம் ரேவா” என்று அவள் கத்தியது காற்றோடு கரைந்து போனது.

வீட்டிற்கு அழைத்து இவள் புகார் படித்தால் இருவீட்டு பெரியவர்களும் இவளை அல்லவா அட்வைஸ் என்ற பெயரில் அறுத்துத் தள்ளுவார்கள். அவசரமாக இவள் வீட்டிற்கு அழைக்க முயல, வெளியே உருமலாக பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்க பதற்றமாக வீட்டிற்கு மேற்கொண்ட அழைப்பைத் துண்டித்தாள் பவதாரிணி.

ஜன்னல் வழியாக அவள் நோக்க நிஞ்ஜா பைக்கை வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு தலையில் மாட்டி இருந்த பச்சை நிற ஹெல்மெட்டை கழற்றி தலை முடியை கோதினான் கைலாஷ்.

அவனைக் கண்டதும் பவதாரிணியின் மனதில் தடதடவென்று ரயிலோடும் சத்தம்.

ஹெல்மெட் வைக்குமிடத்தில் அதனை வைத்துவிட்டு வீட்டின் படிக்கட்டுகளில் ஏறி வீடு நோக்கி வந்தான் கைலாஷ்.

நடையில் ஒரு துள்ளல். முகத்தில் இயல்பாக பூத்த அந்த புன்னகை. அவன் கண்கள் பேசும் கண்களாக இருந்தது. மனதின் பிரதிபிம்பம் போல கண்கள் எண்ணங்களை பிரதிபலித்தது.

அவர்கள் ஃபிளாட் வாயிலில் வந்து காலிங் பெல் அடிக்க கையுயர்த்தியனுக்கு முன்னே பரபரப்பாக கதவைத் திறந்தாள் பவதாரிணி.

அவளின் பதற்றம் முகத்தில் தெரிய, புருவம் உயர்த்தி என்னவென்று வினவியபடி வீட்டினுள் வந்தான்.

“கைலாஷ்… அது… அது…” என்று தயங்கிய அவளை திரும்பிப் பார்க்காமல், படுக்கையறை சென்று வார்ட்ரோப் உள்ளே எதையோ குடையத் துவங்கினான்.

அவள் அதற்கு மேல் பேசாமல் தாவிப்பாக அவன் பின்னே நிற்க,

“சொல்லு” என்றான் இயல்பாக.

“ரேவா…” என்று துவங்க,

“அவ போன் பண்ணிட்டே இருந்தா. என்னனு கால் பண்ணி கேட்கணும். அசோக் வீட்டுல ஒரே சத்தம் எடுத்தாலும் பேச முடியாதுன்னு அடெண்ட் பண்ணவே இல்ல.” என்று அவளுக்கு பதில் கூறிக்கொண்டே,

கீழ் செல்ஃபில் இருந்து சிறிய பை ஒன்றை எடுத்து அதிலிருந்த அவனது டி.எஸ்.எல்.ஆர் கேமராவை வெளியே எடுத்தான்.

அவன் அதை கையில் எடுத்ததுமே பவதாரிணியின் பதற்றம் கூடியது.

“கைலாஷ் மறுபடி வெளில போறியா?” என்று அவசராக வினவ,

“இல்ல. நாளைக்கு ஒரு வேலை இருக்கு. ஜஸ்ட் எல்லாம் சரியா இருக்கானு செக் பண்றேன். அப்பறம் பண்ணிக்கலாம்னு விட்டா சிலது மறந்துடும்.” என்று அவனது டெலி ஜூம் லென்ஸ் எடுத்து அதையும் சரி பார்த்து அதற்கான பெட்டியில் மீண்டும் வைத்து அனைத்தையும் பையினுள் அடுக்கினான்.

இதற்கு மேல் பொருத்திருந்தால் வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிடும் என்ற பயம் மேலோங்க,

“கைலாஷ் நான் ஒரு விஷயம் சொல்லணும்.” என்று தயக்கம் இருந்தாலும் அவசரமாக கூறத் துவங்கினாள்.

அவளையே தலை சாய்த்து பார்த்தபடி ஜன்னல் கம்பிகளில் சாய்ந்து கொண்டான்.

“ரேவா இன்னிக்கு நம்மளை லஞ்ச்சுக்கு இன்வைட் பண்ணி இருந்தா. நான் அதை உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போன் பண்ணி எப்ப வர்றீங்கன்னு கேட்டா, நான் உன்கிட்ட சொல்லவே இல்லன்னு சொன்னதும் கோபப்பட்டு வீட்டுக்கு போன் பண்ணி பேசிக்கிறேன்னு வச்சுட்டா.” என்று மடை திறந்த வெள்ளமாக கொட்டி விட்டு தவறு செய்த குழந்தை போல திருதிருவென்று விழித்தாள்.

“அவ்ளோ தானா? இப்ப அவ வீட்டுக்கு லஞ்ச் சாப்பிட போகணும். போயிட்டா போச்சு. எதுக்கு இதுக்கு போய் டென்ஷன்? நீ ட்ரெஸ் மாத்து.” என்று சாதாரணமாக கூறிவிட்டு அறையை விட்டு வெளியேற தயாரானான்.

“கைலாஷ். அது… அவ… வீட்டுக்கு…” என்று இழுக்க,

“உனக்கு கால் வந்தா எடுக்காத. ஐ வில் மேனேஜ்.” என்று கண் சிமிட்டினான்.

அந்தக் கண்கள் அழகாக சிரித்தது. பவதாரிணியின் இமைகள் படபடவென்று அடித்துக் கொண்டது.

அவன் வெளியேறியதும் வார்ட்ரோப் பக்கம் திரும்பியவள் இன்னும் அதில் தன் உடைகளை அடுக்கவில்லை என்றுணர்ந்து அறையின் மூலையில் இருந்த பெரிய சூட்கேஸ் நோக்கி நடந்தாள்.

அவள் பதறிய பதற்றம் என்ன? அவன் அதை எத்தனை எளிமையாக எடுத்துக் கொண்டதென்ன? எப்படித்தான் இவன் இப்படி இருக்கிறான்னோ? அவனுக்கு எல்லாமே சாதாரணமாக தான் இருக்கிறது. ஆனால் அது தானே அவளுக்கு இன்று வரையிலும் அவன் விஷயத்தில் உறுத்தலாகவே இருந்து வருகிறது!

சூட்கேஸை திறந்து அவளுக்கு மிகவும் பிடித்த ஆர்க்கிட் வண்ண, பூக்கள் பிரிண்ட் செய்த டாப்பை எடுத்துக் கொண்டு அதற்கு தோதாக கோபால்ட் வண்ண ஜீன்ஸ் பேன்டையும் எடுத்தாள்.

வெள்ளி நிறத்தில் ஆர்க்கிட் வண்ண புள்ளிகள் ஆங்காங்கே பிரிண்ட் செய்த ஸ்கார்ஃபையும் எடுத்துக் கொடுத்து வேகமாக உடை மாற்றி அந்த ஸ்கார்ஃபை ஃபேஷன் நாட் போட்டுக் கொண்டு சுருள் சுருளாக இருந்த கூந்தலை கோதி அப்படியே விட்டு அவள் வெளியே வர, செல்போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த கைலாஷ் சத்தமாக சிரித்தான்.

“சரி சரி நேர்ல வர்றேன். மீதியை பேசுவோம் வை.” என்று அவன் பேசியதுமே அது ரேவதி தான் என்று அவளுக்கு புரிந்தது.

“அவ அங்க… வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிட்டாளா கைலாஷ்?” கேள்வி கேட்ட பவதாரிணியின் முகத்தில் இத்தனை நேரம் இருந்த அமைதி பறிபோய் தவிப்பு வந்து குடி கொண்டது.

“அவ எதுவும் சொல்லல. அப்படியே சொல்லி இருந்தாலும் தான் என்ன? மேனேஜ் பண்ணிக்கலாம்.” என்றவன். அவளை தலை முதல் கால் வரை திருப்தியாக ஒருமுறை பார்த்துவிட்டு,

“போவோமா?” என்று வண்டி சாவியை எடுத்தான்.

இவன் அடிக்கடி சொல்லும் ‘மேனேஜ் பண்ணிக்கலாம்.’ என்ற வாசகம் எப்பொழுதும் அவளை எரிச்சல்ப்படுத்தும். ஆனால் இம்முறை அது தனக்கு ஆறுதல் அளிப்பதை உணர்ந்தாள் பவதாரிணி.

மெல்ல அவன் பின்னே நடந்தவளை திரும்பிப் பார்த்தவன்,

“உனக்கு கல்யாணம் தானே ஆச்சு? வயசு கூடி கிழவி ஆகலை தானே! சியர் அப். ஏன் இவ்வளவு டல்லா இருக்க?” என்று கேட்டபடி தனக்கு இணையாக அவளையும் நடக்க வைத்தான்.

மனதிற்குள் இத்தனை நேரம் குமைந்து கொண்டிருந்த உணர்வுகள் பறந்தோட, நிமிர்வான நடையுடன் அவனுடன் இணைந்து நடந்தபோது தன்னையே வித்தியாசமாக உணரத் துவங்கினாள் பவதாரிணி.

இயல்பிலேயே நிமிர்வும் தெளிவும் கொண்டவள் இந்த திருமண விஷயத்தில் குழம்பிப் போய், நடந்த குளறுபடிகளால் ‘என்ன டா வாழ்க்கை இது?’ என்று அவளையும் அறியாமல் சலிப்பு தட்டி விட்டிருந்தது.

அதிலிருந்து அவளை அவளே அறியாமல் வெளியே அழைத்து வரும் கைலாஷை அவளது பார்வை ஆராய்ச்சியாக நோட்டமிட்டது.

மீண்டும் அந்த நிஞ்ஜா பைக்கில் அவன் ஏறிக்கொண்டு அவளைப் பார்க்க, இதுவரை அதில் ஏறியதில்லை என்றாலும் கல்லூரியில் பல நண்பர்களுடன் இதுபோன்ற உயரமான பைக்குகளில் பயணித்த அனுபவம் இருந்ததால் நிதானமாக ஏறிக் கொண்டாள்.

சீரான வேகத்தில் சாலையில் பயணித்த அந்த வாகனத்தில் எந்த பேச்சுக்களும் நடைபெறவில்லை. கணக்கிட்டு அவனை விட்டு சற்று விலகியே அவள் அமர்ந்திருக்க அவனும் பிரேக் போட்டு அவளை தன்னுடன் சேர்த்துக் கொள்ளாமல் அவனுக்கு மிகவும் பிடித்த பாடலை மென்மையாக ஹம்மிங் செய்து கொண்டு வந்தான்.

96 படத்தில் வரும் லைப் ஆப் ராம் பாடல் தான் அது.

“நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே

இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே

இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே

நாளை ஓர் அர்த்தம் காட்டுமே”

அதை காதில் வாங்கியபடி வந்த பவதாரிணியின் மனமோ,

‘எப்படி எதுவுமே நடக்காத மாதிரி இருக்கான் இவன்? இவனால எப்படி சிரிக்க முடியுது?’ யோசிக்க யோசிக்க பைத்தியம் பிடித்து விடும் போல இருந்தது.

அதிலும் திருமணம் முடிந்த இந்த பத்து நாட்களும் அவன் முகத்தில் தெரியும் இயல்பான உணர்வுகள் அவளை இயல்பாக இருக்க விடாமல் இம்சைக்கிறது.

அவள் கண்டது பொய்யா? அல்லது காண்பது பொய்யா? கேட்டது பொய்யா? அல்லது கேட்பது பொய்யா? தன் முன்னே அமர்ந்து வாகனத்தை இயக்குபவனை முடிந்தால் அப்படியே…

அதற்கு மேல் அவளால் யோசிக்க இயலவில்லை. என்ன செய்ய முடியும்? செய்தாலும் அது தனக்கும் சேர்த்து இழுத்து வைத்துக் கொள்ளும் வினையல்லவா?

அதை விட அவளது குடும்பமும் அவனது குடும்பமும் இவனுக்கு சிறு கீறல் விழுந்தாலும் அவளை இரண்டு கூறாக போட்டு விடும்.

அவள் செய்து வைத்திருந்த வேலைகள் அப்படி. ஆரம்பத்தில் இருந்தே பெற்றோர் சொன்னதை கேட்டிருந்தால் இன்று அவள் என்ன சொன்னாலும் அவர்கள் இவள் பக்கமாக நின்றிருக்கக் கூடும்.

ஆனால் அவள் செய்தது… காலம் கடந்து யோசித்து என்ன பயன்? என்று அவள் பெருமூச்சு விட்டாள்.

“ஏன் இப்படி? உன் பெருமூச்சுல நான் பறந்து போயிடுவேன் போல இருக்கே மா!” என்று முன்னால் பார்த்து வாகனத்தை செலுத்தியபடி கேலி செய்தான் கைலாஷ்.

அவள் முகத்தில் எரிச்சல் அப்பட்டமாகத் தெரிய, கண்ணாடி வழியே அதனைக் கண்டவன் , “கூல்…கூல்… என்றபடி ரேவதியின் அப்பார்ட்மெண்ட் முன்னே வாகனத்தை நிறுத்தினான்.

இறங்கி தன் உடையை சரி செய்து கொண்ட பவதாரிணி, பால்கனி வழியாக அவர்கள் வந்ததை கவனித்து ஆரவாரம் செய்த தோழியைக் கண்டு புன்னகை பூத்தாள்.

இவளை முன்னே நடக்கச் சொல்லி அனுப்பிவிட்டு அந்த அப்பார்ட்மெண்ட் வெளியில் இருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரினுள் சென்றவன் ஒரு பை நிறைய பழங்கள், இனிப்பு வகைகள் மற்றும் சாக்லேட்களை வாங்கிக் கொண்டு ரேவதி வீடு நோக்கிச் சென்றான்.

ஹாலில் ரேவதியின் மாமனார் சண்முகம் முன்னே பூனைக் குட்டி போல அமர்ந்திருந்தாள் பவதாரிணி.

“இந்தா அங்கிள் கிட்ட கொடு” என்று அவளிடம் அவன் பையை நீட்ட, திருதிருவென்று விழித்துக் கொண்டே வாங்கி அவரிடம் நீட்டினாள்.

“என்னதும்மா?” என்று வேண்டுமென்றே அவர் அவளை வம்பிழுக்க,

அவசரமாக பையைத் திறந்து பார்த்து, “ப்ரூட்ஸ், ஸ்வீட்ஸ் அங்கிள்” என்று சமாளிப்பாக பதில் கொடுத்தாள்.

அவளது செய்கையில் வாய்விட்டு நகைத்தவர்,

“என்ன டா கைலாஷ், இப்படி பயந்த பொண்ணா இருக்காளே உனக்கு சரி வருமா?” என்று அவனிடம் வம்பு வளர்க்க,

அவனோ, “பயமா? யாரு அவளா? அங்கிள்… காமெடி பண்ணாதீங்க. இதோ என் நெத்தில ஒரு தழும்பு இருக்கே, நீங்க கூட உன் முக அழகையே கெடுக்குது டா கைலாஷ்ன்னு வருத்தமா சொல்வீங்களே, அதை சின்ன வயசுல எனக்கு பரிசா வழங்கிய பிரகஸ்பதி வேற யாரும் இல்ல. சாட்சாத் இவ தான்.” என்றான் இடுப்பில் கையூன்றி நின்றபடி.

“அடப்பாவமே! என் அக்மார்க் அழகன் முகத்தில் மார்க் போட்ட மகராசி நீதானா?” என்று அவர் பவதாரிணி பக்கம் திரும்ப, அவளோ திருவிழாவில் தொலைந்த பிள்ளை போல கண்ணை உருட்டி உருட்டி விழித்துக் கொண்டிருந்தாள்.

“மாமா பாவம் அவ. ரெண்டு பேரும் எப்பவும் ஜோடி போட்டு என்னை கேலி பண்றது போல அவளை பண்ணாதீங்க. எப்படி முழிக்கிறா பாருங்க.” என்றபடி டிரேயில் அவர்கள் அருந்த குளிர்ந்த பழச்சாறு நிறைந்த கண்ணாடி கோப்பைகளுடன் வந்தாள் ரேவதி.

“நீ ஏன் இதை தூக்கிட்டு வர்ற? கூப்பிட்டா நான் வந்து எடுத்துக்க மாட்டேனா? எங்க மாமா? உன்னை வேலை செய்ய வச்சுட்டு என்ன பண்றாரு?” என்று உரிமையாக கர்ப்பிணியான தோழியிடம் இருந்து அதனை பெற்றுக்கொண்டவன் மனைவியிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு ரேவதியின் மாமனார் சண்முகம் அருகில் சென்று அமர்ந்தான்.

“என்ன தான் உங்க மருமக, உங்க மேல பாசமா இருந்தாலும் சூசு எனக்கு தான் கொடுத்தா. பார்த்தீங்களா?” என்று அவரை இடித்துக் கொண்டு சாய்ந்து அமர,

“போடா போடா… முதல்ல எனக்கு கொடுத்துட்டு தான், உங்களுக்கே அவ ரெடி பண்ணினா.” என்று அவனுடன் மல்லுக்கு நின்றார்.

இவர்கள் பேச்சு புரியாமல் மெல்ல நழுவி எழுந்து சமையலறையில் இருந்த ரேவதியிடம் சென்றாள் பவதாரிணி.

“இங்க என்ன டி நடக்குது?” என்று அவள் புரியாமல் வினவ,

“என்ன? என் மாமாவும் கைலாஷும் பேசிக்கிறத பத்தியா கேட்கற?” என்றபடி அப்பளங்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் இட்டு பொறித்து எடுத்தாள் ரேவதி.

“ம்ம்” என்று தலையாட்டிவிட்டு அவள் கொடுத்திருந்த மாம்பழச் சாறை ருசித்துப் பருகினாள் பவதாரிணி.

“அவங்க எப்பவும் இப்படி தான். பிரண்ட்ஸ் போல பேசிப்பாங்க. என் மாமா இப்படி லைவ்வில இருக்கறதே கைலாஷ் இங்க பெங்களூர் வந்த பின்னாடி தான். அத்தை இறந்த பிறகு ரொம்ப ஒடுங்கி போய் சாப்பாடு கூட குறைச்சு, ஆளே கண்ணுல பார்க்க முடியாம இருந்தார். என் வீட்டுக்காரரும் நானும் குட்டிக்கரணம் போடாது தான் குறை. எல்லாம் செய்தும் மாமா சோர்ந்து தான் இருந்தார். ஆனா இவன் வந்தான். அவரை ஆளையே மாற்றிட்டான். இப்ப என் வீட்டுக்காரர் இவன் என்ன சொன்னாலும் கேட்பாரு.” என்று மேடிட்டு இருந்த அவளுடைய வயிற்றை லேசாக தடவுவது போல சொறிந்து கொண்டாள்.

“மாமா உங்க பொண்டாட்டி உங்க பிள்ளையை கொடுமை பண்றா.” என்று சமையலறை வாயிலில் நின்ற கைலாஷ் கத்த,

“அடேய் வாயை மூடு டா. எட்டு மாசம் ஆகுது, வயிறு அரிக்குது டா. நானே அவர் கண்ணுல படாம அப்பப்ப லேசா தேய்கிறது போல செய்யுறேன் அதுக்கே திட்டு வாங்கிட்டு இருக்கேன். நீ வேற கோர்த்து விடுற.” என்றவள்,

“அவன் சும்மா சொல்றான். நீங்க வேலையை முடிச்சிட்டு வாங்க.” என்றவள் கைலாஷ் தலையில் குட்டவும் மறக்கவில்லை.

அவனும் அவள் குட்ட வாகாக குனிந்து வாங்கியதை ஆவென்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பவதாரிணி.

அவள் அறிந்த கைலாஷ் என்பவனுக்கும் இன்று அவள் பார்க்கும் கைலாஷ் என்பவனுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரியாமல் விழித்தாள்.


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top